சென்னை,
பாமகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாமக கட்சியின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது மட்டுமே வாதங்களை வைக்க அனுமதிக்க முடியும் எனக்கூறி, நிராகரிக்க கோரி மனு மீது மட்டும் இரு தரப்பு வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
நாளை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாமக கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கட்சியின் பொதுசெயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்து விட்டது என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வடிவேல் ராவணனின் மனு தொடர்பாக ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
