சென்னை,
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 5 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
