தமிழகத்தில் 110 ஆண்டுகால திராவிட இயக்க வரலாறு உள்ளது. விஜய் போன்றவர்கள் கூட பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது, திராவிடக் கொள்கைகள் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதையே காட்டுகிறது. எனவே, தமிழகத்தில் திராவிடம் சாராத ஒரு சித்தாந்தத்திற்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை. தி.மு.க, அ.தி.மு.க பிடிக்காதவர்கள் சிலர் இந்துத்துவத்தை நோக்கி நகர்ந்தாலும், அது திராவிட இயக்கங்களின் அடிப்படை வாக்குகளை இன்னும் பறிக்கவில்லை.
மேலும், இளைஞர்கள் அனைவரும் விஜய் அல்லது சீமான் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பது ஒரு மாயை. தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் லட்சக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரம், சீமான், விஜய்க்கு பின்னால் ஒருபகுதி இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒருவேளை விஜய் மற்றும் சீமான் இணைந்தால் ‘மூன்றாம் அணி’ உருவாகுமா என்ற கோணத்திலு யோசித்தாலும், அவர்கள் இணைவதற்கு சாத்தியமில்லை. அவர்களுக்குள் இருக்கும் தத்துவார்த்த முரண்பாடு மிகப்பெரிய தடையாக இருக்கும். சீமான் ‘பெரியாரே ஒரு மண்ணு’ என்று விமர்சிக்கும் நிலையில், விஜய்யோ பெரியாரைத் தனது கொள்கைத் தலைவராக அறிவித்துள்ளார். இத்தகைய முரண்பாடுகள் இருக்கும்போது, அவர்கள் இணைவது சற்றுக் கடினம்.
