மும்பை: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல், மும்பை வந்தடைந்தது. ஈரான் மீதான தாக்குதல் துவங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்த முதல் கப்பல் இதுவாகும்.
இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் துவங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சவுதியில் இருந்து கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று மும்பை வந்தடைந்தது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பிறகு அவ்வழியாக வரும் முதல் கப்பல் இதுவாகும்.
மார்ச் 1ம் தேதி சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இந்த கப்பலில் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டது. மார்ச் 3ம் தேதி அங்கிருந்து கிளம்பியது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு Automatic Identification System அமைப்பை 9 ம் தேதி அணைத்து வைத்தது. இந்த கருவி மூலம் தான் கப்பலின் அடையாளம், வேகம், அருகில் உள்ள கப்பல், அருகில் உள்ள துறைமுகங்களை அடையாளம் காண முடியும்.
1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்த கப்பல், மும்பை துறைமுகத்திற்கு நேற்று மதியம் 1 மணிக்கு வந்தடைந்தது. இந்த கச்சா எண்ணெய் கிழக்கு மும்பையின் மஹூல் பகுதியில் சுத்திகரிக்கப்பட உள்ளது.
கிரீசின் ஏதேன்சில் உள்ள டைனாகோம் டாங்கர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பலின் கேப்டனாக இந்தியர் உள்ளார். மேலும், இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த 28 பேர் மாலுமிகளாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
