கவுகாத்தி,
ரஷிய தயாரிப்பான சுகோய் சூ 30 போர் விமானம், இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சுகோய் சூ 30 ரக விமானங்கள் 1997-ல் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்தது. 250 விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ள நிலையில், தற்போது அதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டம் ஜோர்ஹட் விமான தளத்தில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானம் இரவு 7.42 மணியளவில் ரேடார் தொடர்பிலிருந்து காணாமல் போனதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக் கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் மகேந்தர் ராவத் கூறு கையில், சுகோய்-30 போர் விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறினார். இதற்கிடையே கர்பி அங்லாங், சோகிஹோலா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் ஒரு விமானம் காட்டுப் பகுதிக்குள் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் 2 வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை. விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாயமான போர் விமானம் குறித்த உண்மை நிலவரம் தெரியாத பட்சத்தில் எதையும் உறுதிப்படுத்த முடியாது எனவும், தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விமானபடை தனது எக்ஸ் வலைதளத்தில், “பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த Su-30MKI ரக விமானம், ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள அசாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது. தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
