சென்னை,
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் திருவிக நகர் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. இப்போது தான் என்னுடைய முதல் படியை எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் பல படிகளை தாண்ட வேண்டி இருக்கிறது. இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கிறது. அது தொடர்பாக என்னிடம் கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர்.
நான் கண்டிப்பாக வெற்றி பெற்ற பிறகு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பேன். மக்களுக்கு அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், கழிப்பிடம் ஆகியவை இல்லை. கழிவு நீரை சுத்தப்படுத்துவதில்லை. சாலை வசதியில்லை. என்னால் நடந்து கூட செல்ல முடியவில்லை. புளியந்தோப்பு பகுதியில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
