அண்ணாமலை சீட் சர்ச்சையும், 2026 தேர்தலில் தவெக விஜய்யின் தாக்கமும்- பியூஷ் கோயல் ஓபன் டாக்! – piyush goyal about annamalai seat controversy tvk vijay impact in 2026 election

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியை விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்கு டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், தேசிய தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. முதலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணியா, என்.டி.ஏ கூட்டணி தலைமையில் அரசு அமைக்கும் முயற்சியா? என்ற குழப்பத்திற்கு பதில் தேடும் வகையில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையுமா?

அதற்கு, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அதேசமயம் அரசு எப்படி அமையும் என்பது பற்றி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் பார்த்து கொள்ளலாம். தேர்தல்கள் என்றாலே ஆட்சியை பிடிப்பது தான் என்று பாஜக ஒருபோதும் எண்ணாது. தேசியம் தான் முதன்மையானது. அடுத்து கட்சி, கடைசியில் தான் தனிப்பட்ட நபர்களின் நலன் என்று விளக்கினார். இதன்மூலம் 2026 தேர்தல் முடிவுகளில் அதிமுக கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்று விட்டால், என்.டி.ஏவில் உள்ள கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

பாஜகவிற்கு 27 சீட் போதுமா?

இல்லையெனில் நேரடியான பதிலை தற்போதே பியூஷ் கோயல் கூறியிருக்கலாம். அதேசமயம் அதிமுக – பாஜக இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இருப்பதாக சுட்டிக் காட்டினார். 27 சீட்கள் பெற்றதன் பின்னணி பற்றி கேட்கும் போது, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தோம். களத்தில் பாஜகவிற்கு இருக்கும் பலத்தை நன்கு அறிவோம். எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும். எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெல்லலாம் எனக் கணக்கு போட்டு தான் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெற்றோம் என்றார். இந்த தேர்தலை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தவெக விஜய் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

வாக்குகளை பிரிப்பார், ஆட்சி மாற்றம் ஏற்படும், புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்படுகிறது. இதுபற்றிய கேள்விக்கு, விஜய்யிடம் இதுவரை நான் பேசியதே இல்லை. அவருடனான கூட்டணிக்கு தற்போது மதிப்பிருக்காது என்றே உணர்கிறேன். இதையே தான் பாஜக தலைமையும் கருதுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் விஜய்யை கூட்டணிக்குள் அழைக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், விஜய் தனித்து போட்டியிடுவதற்கு பாஜக தான் காரணம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் விஜய் இல்லை

திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கும் யுக்தி என்று பகீர் தகவலை பரப்புரையின் போது பேசியிருந்ததை பார்க்க முடிந்தது. விஜய்பேக்டரை பற்றி மேலும் பேசிய பியூஷ் கோயல், என்.டி.ஏவின் வெற்றி வாய்ப்பை விஜய் நிச்சயம் பாதிக்க வாய்ப்பில்லை. சினிமா நட்சத்திரங்கள் வருவார்கள். போவார்கள். உதாரணமாக எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு 30 ஆண்டுகள் அரசியல் களப் பணி செய்திருக்கிறார். ஜெயலலிதா 20 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்துள்ளார். உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வந்து சென்றுள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு

எனவே இந்த தேர்தலில் விஜய்யால் பெரிய பாதிப்பு வரும் என நான் நம்பவில்லை. தமிழக மக்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க தயாராகி விட்டதாக தெரிவித்தார். 2026 தேர்தலில் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கான வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, எங்களுக்கு 100 சதவீத வெற்றி காத்திருக்கிறது. அந்த அளவிற்கு தமிழக மக்கள் தங்கள் மனங்களை மாற்றி கொண்டுள்ளனர். பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிலம், மண், மது, வேலை, பணி நியமனம், ஒப்பந்தம் என எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு அரசு நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப ஆட்சியால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இம்முறை மக்களின் வாக்குகள் எங்களுக்கு தான் என்றார். தாமரை சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தம் தரப்பட்டதா என்று கேட்டதற்கு, எங்கள் கூட்டணியை பொறுத்தவரை எந்தவித அழுத்தமும் யாருக்கும் இல்லை. ஒரே ஒரு ஆலோசனை கூட்டத்தின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தியா?

சில கூட்டணி கட்சிகள் அவர்களாகவே தாமரை சின்னத்தை தேர்வு செய்தனர். முற்றிலும் ஜனநாயக முறைப்படி நடந்து வருவதாக குறிப்பிட்டார். அண்ணாமலை சீட் கிடைக்காததால் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாம் அனைவருமே கட்சிக்காக வேலை செய்ய வந்திருக்கிறோம். அண்ணாமலை மூத்த தலைவர். மாநில தழுவிய அளவில் பரப்புரை மேற்கொள்கிறார். நாங்கள் தொடர்ச்சியாக பேசி கொண்டிருக்கிறோம். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.