சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்க உள்ளது. சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முற்றுபெறவில்லை.தி.மு.க.வில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. மற்றொரு பக்கம், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. உத்தேசமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அ.தி.மு.க. தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி. தினகரன் (அ.ம.மு.க.) ஆகியோரும் டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அ.தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு பதிலாக ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே இன்று (திங்கட்கிழமை) காலை 9.50 மணிக்கு சென்னை வரும் பா.ஜனதா மேலிட பார்வையாளர் பியூஸ் கோயல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.ஒரே நேரத்தில் தொகுதி பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
