சட்டமன்ற தேர்தலுக்காக புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள சீட்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த சீட்டில் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி போட்டியிடவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பாஜகவுக்கு அதிகபட்சமாக 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அன்புமணி தரப்பிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமாகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து இடங்களில் அக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள்
இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறந்த வீடு சீதனமாக அதிமுகவும், புகுந்த வீடு சீதனமாக பாஜகவும் புதிய நீதி கட்சிக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்தார்.
வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் புதிய நீதிக்கட்சி சார்பாக சுந்தர் சி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அதிமுக தலைமையிலான 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் சுந்தர் சி சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக சார்பில் ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் வேட்பாளர் குறித்தான அறிவிப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி
இந்நிலையில் சுந்தர் சி வேட்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவரின் மனைவியும், தமிழக பாஜக துணைத் தலைவருமான சுந்தர் சி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், “தன்னுடைய அரசியல் பயணத்தை சுந்தர் சி துவங்குகிறார். புதிய நீதிக்கட்சி சார்பாக மதுரை தொகுதியில் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக களமிறங்குகிறார்.
வாழ்த்து தெரிவித்த குஷ்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உள்ள அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் அவரது தந்தை தந்தை சிதம்பரம் பிள்ளை, 94 வயதாகும் தாயார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை நல்வாழ்த்துக்களுடன் இந்த பயணத்தை சுந்தர் சி துவங்குகிறார். ஏ.சி. சண்முகம் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவுடன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்.
எப்போதும் மக்களின் மனிதனாக அவர் இருப்பார். தமிழ்நாட்டு மக்களை தனது கலைத்திரமையால் கடந்த முப்பது ஆண்டுகளாக மகிழ்வித்து வரும் சுந்தர் சி, தன்னை உருவாக்கிய மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவார். இதில் அவரின் மனைவி என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு நெகிழ்ச்சியுடன் குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
