மதுரை,
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.13 மணியளவில் மதுரையை தாண்டி திருமங்கலம் ரெயில் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் என்ஜினில் இருந்து புகை வருவதாக நினைத்து பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருமங்கலம் ரெயில் நிறுத்தத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்காமல் செல்லும்.
இந்நிலையில் திடீரென இந்த ரெயில் திருமங்கலம் ரெயில் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் சந்தேகம் அடைந்தனர். உடனே என்ஜின் லோகோ பைட் மற்றும் திருமங்கலம் ரெயில்வே அதிகாரிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கப்பட்ட பொதுப்பெட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஜல்லிக்கற்கள் தண்டவாளம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்ததும், ரெயில் வந்த அதிர்வில் ஜல்லிக்கற்களில் இருந்து தூசி புகை போல் கிளம்பியதால் என்ஜினில் தீப் பிடித்ததாக நினைத்து பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தியதாக தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடம் தாமதமாக மீண்டும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
