சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதக தனித்து போட்டியிட போவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இபிஎஸ் குறித்து பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்து கிருஷ்ணசாமி பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்ற நிலையில், இந்த தேர்தலில் தங்களை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அவர் 15 இடங்கள் வரை கேட்ட நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகி, தனித்து போட்டியிட போவதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
புதக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து இபிஎஸ் குறித்து கடும் கோபத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் கிருஷ்ணசாமி. அவர் கூறியுள்ளதாவது, 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவருடன் கூட்டணி அமைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தினோம். பாஜகவும் அதில் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் நாங்கள் போட்டியிட்ட இடத்தில் அதிக வாக்குகளை பெற்றோம்.
பலவீனமான நிலையில் அதிமுக
ஆனால் அதிமுக போட்டியிட்ட திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த சதவிகிதம் வாக்குகளையே பெற்றனர். தென்தமிழகத்தில் போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் டெபாசிட்டே போச்சு. இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமை. ஏறக்குறைய 50 முதல் 60 தொகுதிகளில் இன்றும் டெபாசிட் பெற முடியாத பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் கூட தமிழ்நாட்டின் நலன் கருதி அவர்களுடன் இணைவதற்கு முடிவு செய்தோம்.
மரியாதையை அளிப்பதற்கு தயாராக இல்லை
இந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொள்ள நினைத்தோம். ஆனால் அவர்கள் புதிய தமிழகம் கட்சிக்கு உண்டான மதிப்பை, மரியாதையை அளிப்பதற்கு தயாராக இல்லை. அவர்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். டெல்லியில் மோடி இருக்கிறார். அமித்ஷா எப்படியாவது என்னை முதலமைச்சர் ஆக்கி விடுவார் என்ற கனவோடு இபிஎஸ் அவர் உள்ளார். உண்மையில் சொல்லப்போனால் இந்த தேர்தலில் அனைவரையும் புறக்கணித்துள்ளார்.
பாஜக வெற்றி பெற முடியாத தொகுதிகள்
அவரை ஆளாக்கிய சசிகலாவை ஒதுக்கி வைச்சுட்டாரு. முப்பது ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் அவர்களை புறக்கணிச்சுட்டார். பாஜகவுக்கு வெற்றி பெற முடியாத 27 இடங்களை வழங்கியுள்ளார். தான் மட்டும் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம். அமித்ஷா எப்படியாவது முதலமைச்சர் ஆக்கிவிடுவார் என்று அனைவரையும் உதாசீனப்படுத்துகிறார் இபிஎஸ். அதற்கான பலனை அவர் அனுபவிப்பார். ஆட்சி அமைப்பதற்கான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைத்த மாதிரி தெரியவில்லை.
அவரை சுற்றி இருக்கும் ஒரு நாற்பது பேர் ஜெயித்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதை போன்று தான் தெரிகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கிருஷ்ணசாமி. இதனையடுத்து புதிய தமிழகம் கட்சி அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதுக்குறித்து சீக்கிரமே முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என அவர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
