அமெரிக்கா – இரான் இடையே 21 மணி நேரம் நீடித்த பேச்சு தோல்வி – பாகிஸ்தானில் என்ன நடந்தது?

15 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானில் அமெரிக்கா – இரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா – இரான் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர் “ஓர் உடன்பாடு எட்டப்படும் வகையில், பேச்சுவார்த்தைகளைச் சுமூகமாக முன்னெடுத்துச் செல்வதில் பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டது,” என்றார்.

“நாங்கள் கடந்த 21 மணி நேரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்; ஆனால் வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், எங்களால் எந்தவொரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

“நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துவிட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்திருந்தால், அதற்குக் காரணம் பாகிஸ்தானியர்கள் அல்ல; ஏனெனில் அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைப் பாராட்டினார். அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானிலிருந்து விடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் தொடங்கிய இரான் மற்றும் அமெரிக்கக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், இரவு வெகுநேரம் வரை நீடித்தன. இவ்விரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.

பிபிசி செய்தியாளர் கிரிஸ்டல் ஹேய்ஸ் அளித்த தகவலின்படி, இஸ்லாமாபாத் நேரப்படி, அங்குள்ள செரீனா ஹோட்டலில் இந்த பேச்சுவார்த்தை அதிகாலை 4:50 மணி வரை நீடித்தது.

பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்பு, பாகிஸ்தானின் நல்லெண்ண முயற்சிகள் மற்றும் மத்தியஸ்தத்தின் கீழ் இன்று காலை தொடங்கிய கடினமான பேச்சுவார்த்தைகள் எந்தவித இடையூறும் இன்றித் தொடர்வதாக இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, எக்ஸ் எனும் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பினருக்கும் இடையே பல செய்திகளும் எழுத்துப்பூர்வ வரைவுகளும் பரிமாறப்பட்டன.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ஹோர்முஸ் நீரிணை, அணுசக்திப விவகாரம், போர் இழப்புகளுக்கான இழப்பீடு, தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்தியத்தில் பகைமைகளை முழுமையாக அகற்றுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் முடிவடைவதற்கு முன்பே, இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது தனக்கு “எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், “இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு” “பதற்றங்களை நிரந்தரமாகக் குறைப்பதற்கான வழியைக் கண்டறியுமாறு” பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இரானை வலியுறுத்தினார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் மக்ரோன், மசூத் பெசெஷ்கியனுடன் பேசியதாகவும், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பிராந்திய பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தத்தின் அவசியம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, மற்றும் லெபனான் உட்பட ஒரு போர் நிறுத்தத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியதாகவும் கூறினார்.

‘இரானின் அணுசக்தித் திட்டத்தை நிறுத்துவதே முக்கியம்’

இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், “இரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயலவோ, அல்லது அதனை உருவாக்குவதற்கான வழிமுறைகளைப் பெறவோ செய்யாது என்ற தெளிவான மற்றும் உறுதியான உறுதிமொழியை நாம் இரானிடமிருந்து பெற வேண்டும் என்பதே எளிய விஷயமாகும்,” என்று கூறினார்.

அதை அவர் டொனால்ட் டிரம்பின் ‘முக்கிய இலக்கு’ என்று குறிப்பிட்டார்.

இரானின் அணுசக்தித் திட்டம் “அழிக்கப்பட்டுவிட்டது” என்று கூறிய வான்ஸ், எதிர்காலத்தில் இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க “வலுவான மற்றும் அடிப்படையான அரசியல் உறுதிப்பாடு” தேவை என்று வலியுறுத்தினார்.

“அந்த உறுதிப்பாட்டை நாங்கள் இன்னும் காணவில்லை. அது கிடைக்கும் என்று நம்புகிறோம்.”

“இரான் எங்கள் முன்மொழிவுகளை ஏற்கத் தயாராகும் ஒரு நிலையை நாங்கள் இன்னும் எட்டவில்லை,” என்றார் அவர்.

உரையாடலின் போது, ​​அவர் செய்தியாளர்களிடம், “நாங்கள் மிகவும் இணக்கமான அணுகுமுறையைக் கையாண்டோம் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

‘அமெரிக்கா அதீத கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும்’

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நிலை பற்றி இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேச்சுவார்த்தை ‘தீவிரமாக’ இருந்தது எனக் குறிப்பிட்ட அவர் அதன் வெற்றி என்பது, “எதிர்தரப்பின் தீவிரம் மற்றும் நல்லெண்ணத்தைச் சார்ந்தது.” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா “அதிகப்படியான மற்றும் சட்டப்பூர்வமற்ற கோரிக்கைகளை” தவிர்க்க வேண்டும் எனக் கூறும் பகாய் இரானின் “சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை” ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரினார்.

ஹோர்மூஸ் நீரிணை, இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் “இரானில் நடைபெற்று வரும் போரை முழுமையாக நிறுத்துவது” உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“இரானுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடியவில்லை” – நெதன்யாகு

லெபனான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “ஒப்புதல்” வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே செய்தியில் இரானுக்கு எதிரான நடவடிக்கைகள் “இன்னும் முடியவில்லை” என்றும் “நாங்கள் இன்னும் அவர்களை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றும் தெரிவித்தார். மேலும் “இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த சமயத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், இரானின் அணுசக்தி திட்டங்களை அழித்தது உள்ளிட்ட இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் சாத்தியமான “சாதனைகளை” பட்டியலிட்டிருந்தார்.

“இந்த சாதனைகள் இன்னும் முடியவில்லை. இரானில் இன்னும் செறிவூட்டப்பட்ட பொருட்கள் உள்ளன. அதிபர் டிரம்ப் சொன்னதைப் போல அது நீக்கப்பட வேண்டும். அது ஒன்று ஒப்பந்தத்தால் நீக்கப்பட்டால் அல்லது இதர வழிகளில் வெளியே வரும்,” என்றும் தெரிவித்திருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link