அமெரிக்கா: விசா மோசடி வழக்கில் 11 இந்தியர்கள் கைது

அமெரிக்கா,

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் போலியான ஆயுதங்களை காட்டி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக, அங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 11 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘யு-விசா’ என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதே இவர்களின் சதி திட்டம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலியாக ஆயுதங்களை காட்டி கொள்ளைச் சம்பவத்தை நடத்தி அதில் தன்னை ஒரு “பாதிக்கப்பட்ட நபர்” போலக் காட்டி, அதன் மூலம் யு-விசா என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதே இவர்களின் ஒரே நோக்கம். இந்த விசா கிடைத்தால், அவர்கள் சட்டப்பூர்வமாக அங்கு தங்குவதோடு, பின்னர் கிரீன் கார்டு பெறவும் தகுதி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

யு விசாவின் முலம் புலம்பெயர்ந்தோருக்கு வேலை அங்கீகாரத்தையும் 5-10 ஆண்டுகளுக்குள் கிரீன் கார்டு பெறுவதற்கான குறுக்குவழியாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகுமாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர். பின்னர், அந்தப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசா மோசடி சதி குற்றச்சாட்டு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. சிறைத்தண்டனை முடிந்த பிறகு, சுமார் 3 ஆண்டுகள் வரை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்க நேரிடும். மேலும் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் தலா சுமார் 2.31 கோடி வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Source link