சென்னை,
சென்னை மாநகரில் சுமார் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர்ப்புற ஏழைகளுக்கான நேரடி உணவு வினியோகத் திட்டமான இந்த உணவகங்கள் அதிக மானிய விலையில் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இங்கு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, கறிவேப்பிலை சாதம் ரூ.5 மற்றும் தயிர் சாதம் ரூ.3 என உணவு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 3 நாளைக்கு 2 சிலிண்டர்கள் வீதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் உணவகங்களை நடத்துபவர்களிடம், சிலிண்டர்கள் தேவை என்பதை முன்கூட்டியே கூறிவிட வேண்டும். அதேபோல், முன்பதிவு செய்வதும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறும்போது, “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. அதேபோல், சென்னையில் கேஸ் (எல்.பி.ஜி.) மூலம் இயங்கும் மின் மயானங்களில் எரிவாயு தட்டுப்பாடு தற்போது வரை இல்லை. தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
