அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் – சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரின் மேற்பார்வையில் மாணவர்கள் சிலர் கழிவறையை சுத்தம் செய்ததை போன்று வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ததை போன்றும் உள்ளது. இதேபோன்று அடிக்கடி மாணவர்களை சுத்தம் செய்ய வைத்ததாகவும, அதன்காரணமாக யாரோ ஒருவர் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, “பள்ளியில் கழிவறையை தற்காலிக பெண் ஊழியர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மாணவர்களும் தாங்களாகவே முன்வந்து கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். தற்போது பள்ளியில் கட்டிட வேலை நடந்து வருகிறது.

இப்பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து கழிவறையை சத்தம் செய்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த வீடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link