சென்னை, கொளத்தூரில் வசித்து வரும் காஞ்சனா, என்பவர், தனது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால், 04.06.2025 அன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனிருந்து கவனித்து வந்தார். இந்நிலையில், 06.06.2025 அன்று மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் மருத்துவரை பார்க்க சென்றார். அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்து கொண்டு உங்களது மாமியாரின் சிகிச்சையை நான்தான் கவனித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன், ஆவணங்களை காண்பிக்குமாறும் கேட்டதன்பேரில், காஞ்சனா மருத்துவ ஆவணங்களை காண்பித்தார்.
பின்னர் மறுநாள் (07.06.2025) வார்டுக்கு வந்த அதே மருத்துவர் என கூறிய நபர் காஞ்சனாவை மாத்திரைகள் வாங்க வேண்டும் என அழைத்துக் கொண்டு 7வது தளத்திற்கு சென்றார். அப்பொழுது உங்களுக்கும் ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி, ஸ்கேன் எடுப்பதற்கு முன் தங்க நகைகள் மற்றும் செல்போனை ஒரு பையில் வைக்கும்படி கூறியதாக தெரிகிறது. பின்னர் காஞ்சனா தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலிச்சரடு, 2 கிராம் மோதிரம் மற்றும் செல்போனை ஒரு பையில் போட்டு கொடுத்து இருக்கிறார்.. உடனே அந்த நபர் இந்த நகைகளை தனது கேபினில் வைத்துவிட்டு வரும் வரை இங்கேயே இருக்குமாறு கூறிச் சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் பின்னர் வரவில்லை.
பல மணி நேரத்திற்கு பிறகு தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து காஞ்சனா தங்க நகைகளை கண்டுபிடித்து தரும்படி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேற்படி நூதன திருட்டில் ஈடுபட்ட கோவைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்வி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோட்டமிட்டு, காஞ்சனாவை ஏமாற்றி தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றதும், பின்னர் தங்க நகைகளை விற்று தங்க நாணயங்கள் மற்றும் பழைய காரை வாங்கி பல இடங்களில் சுற்றி வந்ததும், தெரியவந்தது. அதன்பேரில், கைதானவர்களிடமிருந்து 12 கிராம் எடை கொண்ட 2 தங்க நாணயங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ராஜேஷ் பிரித்வி மீது மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உட்பட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

