தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் நேற்று சங்கரலிங்கபுரம் முதல் மூப்பன்பட்டி வரை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சந்தேகப்படும்படி 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதிபாண்டியன் (வயது 22), பாலமுருகன்(23) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த 3 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து, சேதுபதி பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் திருநெல்வேலியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.
