அறுவடை பணியின்போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 37). விவசாயியான இவர் க.சுப்ரமணியபுரம் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தனது காட்டில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் எந்திரத்தில் பால்ராஜ் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் மீது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில், பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு சுமார் 70 சதவீதத் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 31-ம் தேதி மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்ராஜ், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுவடைப் பணியின் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link