ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எனக்கே சீட் இல்லை.. அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் பகிரங்க குற்றச்சாட்டு – dhanapal spoke on not being given the opportunity to contest the 2026 assembly election

சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தான பட்டியல் வெளியானது. இதில் சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக மூத்த தலைவரான, சபாநாயகராகவும் பதவி வகித்த தனபாலுக்கு சீட் வழங்கப்படவில்லை . இது அரசியல் களத்தில் பலவிதமான விவாதங்களை கிளப்பியது.

முன்னாள் சபாநாயகர்
அவிநாசி தற்போதைய எம்எல்ஏவான தனபால் அதிமுகவின் மிக மூத்த நிர்வாகி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பையும் பெற்றுள்ள இவர் சபநாயகராகவும் இருந்துள்ளார். இவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படாதது அதிகவினர் இடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுக்குறித்து தற்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் தனபால்.

ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எனக்கே சீட் கொடுக்கவில்லை
தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சபாநாயகர் பொறுப்பில் நான் இந்த சமயத்தில் ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அப்போது அவர்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். இப்படி கட்சிக்கு எதிரான பல இக்கட்டான சூழ்நிலைகளில் நான் உதவியாக இருந்து காப்பாற்றி கொடுத்துள்ளேன். ஆனால் தற்போது கட்சிக்குள் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.
பாஜகவுக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தும் போட்டியிட விருப்பமா, இல்லையா? என்றுக்கூட யாரும் யாரும் என்னிடம் கேட்கவில்லை. அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். நடப்பது நடக்கட்டும் என வேதனையுடன் சபாநாயகர் பேசியுள்ளார். ஆட்சியை காப்பாற்றி கொடுத்த தன்னிடம் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு வழங்கப்போவது குறித்து கூட கட்சி சார்பில் இருந்து யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும் தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார் தனபால்.

தவெகவில் இணைந்த தனபால் மகன்
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமாக அவர் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் சில பகீர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது சம்பந்தமாக பேசுகையில், கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கருத்தை கூறி தான் அவருடைய மகன் தவெகவில் இணைந்தார். இதய அறுவை சிகிச்சை செய்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூட, கட்சியில் இருந்து யாரும் பார்க்க வரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

அதிமுகவில் பலர் மனக்குமுறல்
ஜெயலலிதாவால் பெரிதும் மதிக்கப்பட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகி தனபால். அவர் சொன்னதை போலவே ஆட்சியை காப்பற்றியது அவர்தான். என்னை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது கவனிக்க வேண்டியது. அவரை போன்று பலரும் மனக்குமுறலில் இருக்கின்றனர். தனபால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதையும் கவனிக்க வேண்டும். இப்போது இருக்கும் எதிர்கட்சி அந்தஸ்தை கூட அதிமுக தக்க வைக்கவில்லை என்றால், தனபால் மாதிரி இருப்பவர்கள் வெளியில் வந்து இபிஎஸ்ஸுக்கு எதிராக கொடி தூக்குவார்கள்.
தேர்தலுக்கு பின் இபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் சவால்
தேர்தலுக்கு பிறகு அதிமுகவினர் சந்திக்க போகும் பிரச்சனைகளுக்கு முன்னோட்டமாக தனபால் அவர்களுடைய குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளது. இவ்வாறு மூத்த பத்திரிக்கையாளரான தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நிலையில், தனபாலின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link