பொள்ளாச்சி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத் திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை என்று முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் காங்கிரஸ் ராஜீவ் காந்தி பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் படங்களுடன் ‘அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்’, வேண்டும்! வேண்டும்! ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சி உடனே கூட்டணி வேண்டும்…
அகில இந்திய தலைமையே. புரிந்து கொள்! புரிந்து கொள்!!.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறோம்… வேண்டாம், வேண்டாம்!! தன்மானம் இழந்து சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்…என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
