அமராவதி,
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை ஆகிய சவால்களைச் சமாளிக்க, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்கி உள்ளது.
* இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ. 25,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும்.
* மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக, அக்குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் மொத்தம் 60 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
* 18 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
*தாய்மார்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.
*தந்தைமார்களுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பு.
* கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத் திருத்தங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவு. இதனால், 2047-ம் ஆண்டிற்குள் ஆந்திரா ஒரு “வயதான மாநிலமாக” மாறும் அபாயம் உள்ளதால், இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்-மந்திரி இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் இந்த அதிரடி சலுகையால் பெற்றோர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இனி ஆந்திராவில் எந்த வீட்டில் பார்த்தாலும் குவா குவா என்ற சத்தம் ஒலித்துகொண்டே இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
