சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 24-ந்தேதி மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக கூறியுள்ளார்கள். மேலும் அதற்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய அந்த இளம்பெண் மர்ம நபர்கள் கூறியபடி, அவர்கள் சொன்ன வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 800 செலுத்தியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் மர்மநபர்கள் உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளனர். அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
