ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 பேர் மீது போலீஸ் குற்றம்சாட்டியது. இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். சம்பவம் செந்தில் உள்ளிட்ட இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை தயாரித்து போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியது. மொத்தம் 14 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த உத்தரவை ஆம்ஸ்ட்ராங் மனைவி முறையீட்டின் பேரில் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதையடுத்து அஸ்வத்தாமன் சார்பில் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதேபோல புதூர் அப்பு, சிவா, முகிலன் சார்பில் வக்கீல் எஸ்.வைரவன், பிரதீப் சார்பில் வக்கீல் ஜஸ்வந்தி, சதீஷ்குமார் சார்பில் வக்கீல் குமார் மிகிர் ஆகியோரும் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றில், “அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், உத்தரவை ரத்து செய்து ஜாமீன் தர வேண்டும்” என்றும் கோரியுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Source link