‘ஆ.ராசாவை தட்டிக்கேட்க தெம்பு இருக்கிறதா?’ – மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

விழுப்புரம்,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை முடித்துவிட்டு, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளவனூர் திருச்சி ட்ரங்க் சாலைக்கு வந்தார். பிரமாண்ட வரவேற்புக்குப் பிறகு அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“தமிழ்நாட்டில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தேர்தல் என்று மக்களை குழப்புகிறார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையானது. தி.மு.க. கூட்டணி அடிமை கூட்டணி.

எங்கள் கூட்டணி 10 ஆண்டுகள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் மு.க.ஸ்டாலின். அப்படியென்றால் 10 ஆண்டுகள் அடிமையாக இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா? அப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அப்படியென்றால் புதுச்சேரி, கேரளாவில் ஏன் எதிர்த்து நிற்கிறீர்கள்? மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு. ஒருமுறை தமிழ்நாடு மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இந்தமுறை தி.மு.க.வை அகற்ற முடிவு செய்துவிட்டார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு இரண்டு நாட்களாக தூக்கம் போய்விட்டது. அதற்கு காரணம் ஆ.ராசா. அவர் ஆடியோவில் பேசியதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார். அந்த ஆடியோவில் இருக்கும் செய்தியைத்தான் நான் சொல்கிறேன். கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று அந்த ஆடியோவில் ஆ.ராசா சொல்கிறார்.

2021 தேர்தலில் 22-வது வாக்குறுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், ஆ.ராசா சொன்ன கருத்து விசாரிக்கப்பட்டு, உண்மை இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் அப்பாவாக இருந்தாலும், அவர் முன்னாள் முதல்-அமைச்சர்.

ஜெயலலிதாவை விமர்சனம் செய்த அதே பாணிதான். உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? ஆ.ராசாவை கண்டித்தால் இன்னும் பல ஆடியோ வந்துவிடும் என்பதால் பயப்படுகிறார். அவர் சொன்ன கருத்தைத் தான் நான் சொன்னேன், நாங்களாக எதுவும் சொல்லவில்லை.

நான் திண்ணையில் படுத்துக்கிடந்தேன் என்று நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் பேசினார். எப்போது பார்த்தாலும் முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார். கருணாநிதி திருட்டு ரெயிலில் வந்தார் என்று எங்களுக்குச் சொல்ல தெரியாதா..? பொறுப்பு தவறி பேசினால் எங்கள் தொண்டர் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்.

திருட்டு ரெயிலில் வந்தவருக்கு இவ்வளவு ரோஷம் என்றால், விவசாயியாகப் பிறந்து உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும்..? நாவடக்கம் தேவை. ராசாவை தட்டிக்கேட்க தெம்பு இல்லாத முதல்-அமைச்சர். அப்பாவையே வீட்டுச் சிறையில் அடைத்தவர், நாட்டு மக்களுக்கு என்ன கதி? கருணாநிதி இருக்கும்வரை மு.க.ஸ்டாலினை தலைவர் ஆக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கைக்குரியவர். அவர் எங்களை விமர்சிக்க அருகதையில்லை.

தூத்துக்குடியில் பதநீர் குடித்தபோது, சர்க்கரை போட்டீர்களா என்று கேட்ட மங்குனி எங்களைப் பற்றி பேசலாமா? டெல்டா விவசாயிகள் பயிர்களை நேரில் பார்க்க வக்கில்லாத முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் பார்க்கிறார். நெற்பயிர் என்றால் என்னவென்றே தெரியாத மங்குனி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நமக்கு நாமே திட்டத்தில் ஊர் ஊராகப் போனார். சேலம் தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் ரோடு போட்டு பார்த்தவர். எங்களை ஒரு வார்த்தை பேசினால் திருப்பி 10 வார்த்தை பேசுவோம். அவர் அண்ணன் அழகிரியே பேசியிருக்கிறார், எங்க அப்பா சிறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

நாட்டிற்கே முதன்மையான அரசாம்… எதில் கமிஷன் வாங்குவதில், கொள்ளையில், பாலியல் சீண்டலில் இப்படி எல்லாவற்றிலும் முதன்மை. எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. கருணாநிதி அப்போதே மு.க.ஸ்டாலினுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். எதில் கமிஷன் வருகிறதோ அதை செய் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

வீராணம் ஊழல், சர்க்கரை பேர ஊழல், அரிசி பேர ஊழல், சேதுசமுத்திரம் ஊழல், கழிவறை ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மாநகராட்சி பங்கு பிரிப்பதில் ஊழல், சொத்து வரி முறைகேடு இப்படி ஊழலுக்கு ஊற்றுக்கண் தி.மு.க. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. சர்க்காரியா கமிஷனில் சர்க்கரையை எல்லாம் எறும்பு தின்றுவிட்டது, சாக்கை கரையான் அரித்துவிட்டது என்றனர். இவ்வளவு மோசமான கட்சிக்கு எங்களை விமர்சிக்கத் தகுதியிருக்கிறதா?

இங்கு ஒரு அமைச்சர் இருந்தார். பொன்முடி, அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசு பிறழ்சாட்சி காரணமாக வழக்கு தள்ளுபடி ஆகியுள்ளது. மீண்டும் இவ்வழக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஆதாரத்தோடு விசாரிக்கப்பட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணமில்லா பேருந்து கொடுத்தேன் என்கிறார் முதல்-அமைச்சர். ஆனால், பொன்முடி என்ன சொல்கிறார், ஓசி பயணம் என்கிறார். இது அரசு சொத்து. நாங்கள் அறிவிப்பு செய்திருக்கிறோம். ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்த கேடு கெட்ட அரசு இது. வைகோவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தி.மு.க.வை எதிர்த்து கட்சி தொடங்கிவிட்டு, இப்போது தி.மு.க. சின்னத்தில் நிற்கிறார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, காங்கிரஸை திருப்திபடுத்த விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினார்கள். அப்போது வைகோ, இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது என்று பேட்டி கொடுத்தார்.

இப்போது அதே தி.மு.க.வுடன் அவர் கூட்டணி. ம.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்றார். இப்படித்தான் இருக்கிறது கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி அப்படியா இருக்கிறது? எங்கள் கூட்டணித் தலைவர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் சந்தித்தோம், இரண்டு மணி நேரத்தில் பேசி தொகுதிகளை அறிவித்தோம்.

தி.மு.க.வும் காங்கிரஸும் 20 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வெளியேறுவதாகவும் செய்தி வந்தது. அந்த கூட்டணி மனப்பூர்வமாக அமைந்த கூட்டணி அல்ல. கம்யூனிஸ்ட், வி.சி.க., காங்கிரஸ், தி.மு.க.வை தாங்கிப் பிடித்தது. எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இப்போது அவர்களுக்கு ஒரு இடம் குறைவு, வி.சி.க.வுக்கு கேட்ட இடம் கிடைக்கவில்லை.

வெண்டிலேட்டரில் ஒரு கட்சி இருந்தது, அதற்கு உயிர் கொடுத்தது அ.தி.மு.க. அது அங்கு இணைந்து தேவையான இடத்தை எடுத்துக்கொண்டது. அ.தி.மு.க. சிறப்பான கூட்டணி. முதல் நாள் கூட்டணி பங்கீடு அறிவிப்பு. இரண்டாவது நாள் தேர்தல் அறிக்கை. மூன்றாவது நாள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல். இதுதான், கூட்டணி வலிமையைக் காட்டுகிறது. இந்த தேர்தலில் முரண்பட்ட கூட்டணி வெளிச்சத்துக்கு வரும்.

திருமாவளவன் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது. தி.மு.க. அழுத்தம் காரணமாக பின்வாங்கிவிட்டார். கூட்டணிக் கட்சி கூட சுயமாக முடிவெடுக்க முடியவில்லை, அப்படி அடிமையாக இருக்கும் கட்சிகள். அவர்கள் கூட்டணியில் வெந்து புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

போதைப் பொருள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. எங்கே பார்த்தாலும் கஞ்சா. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டுவந்தேன். பேட்டி கொடுத்தோம், ஒன்றுமே நடவடிக்கை எடுக்கவில்லை. போதை ஆசாமிகளால்தான் குற்றங்கள் நடக்கிறது, அதை தடுக்க முடியவில்லை. ரோட்டில் போகிறவர்களை எல்லாம் வெட்டுறார்கள்.

ஒரு டிஜிபி இருந்தார். அவர் 2.0, 3.0, 4.0 என்று ஓ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். போலீஸ் புகார் எடுக்கவில்லை. இது வெட்கக்கேடு. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இன்றுகூட 83 வயது பாட்டிக்கு பாலியல் சீண்டல். கஞ்சா ஆசாமிகளால் தான் குற்றங்கள் நடக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்து மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தி.மு.க. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியானது. அதில் 30 ஆயிரம் கோடி கையில் வைத்துக்கொண்டு சபரீசன், உதயநிதி தடுமாறுகிறார்கள் என்று சொன்னார். இரண்டே ஆண்டில் அவ்வளவு கொள்ளை.

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் இருக்கின்றன. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்கின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

அரசு காலிப்பணியிடம் ஐந்தரை லட்சம் நிரப்புவோம் என்றார். ஆனால் 94 ஆயிரம் பேரைத்தான் நிரப்பினார்கள். ஓய்வு பெற்றவர்கள் ஒரு லட்சம் பேர். எப்படி பச்சை பொய் பேசுகிறார்..? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றவில்லை. செவிலியர், விவசாயிகள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

82 கோடியில் கருணாநிதிக்கு எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பாராம். பேனாவை நினைவு மண்டபம் அருகில் வையுங்கள். கடலில் வைப்பது என்றால், தி.மு.க. டிரஸ்டில் 8 ஆயிரம் கோடி இருக்கிறது, அதில் வையுங்கள். எழுதும் பேனாவை அரசு பள்ளி மாணவர்களுக்குக் கொடுங்கள். இவர்தான் இப்படி என்றால், மகன் உதயநிதி கார் பந்தயம் நடத்துகிறார். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆளவேண்டுமா?

525 வாக்குறுதிகளைக் கொடுத்து நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, ரேஷன் கடையில் கூடுதல் சர்க்கரை கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகச் சொல்லிக் குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகச் சொல்லி உயர்த்தவில்லை. எதுவும் நிறைவேற்றாமல் இப்போது மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட வெட்கம் கெட்ட அரசுதான் தி.மு.க.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர், அதாவது சுமார் 41% பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பு வரை, நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வை ஒருபோதும் மாநில அரசால் ஒழிக்க முடியாது என்பதால், ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, இந்த எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டம் தான் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு மூலம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இப்படி ஒரு சாதனை செய்தார்களா?

அ.தி.மு.க. ஆட்சி இருண்ட ஆட்சி என்று சொல்லும் முதல்-அமைச்சர் அவர்களே, சாதனை சொல்கிறேன், கேளுங்கள். ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். இந்த நான்காண்டுகளில் தி.மு.க. அரசால் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல், 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், விழுப்புரத்தில் ஒரு சட்டக்கல்லூரி கொடுத்தோம். 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்தோம்.

6 மாவட்டம் பிரித்தோம், பொற்கால ஆட்சி கொடுத்தோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சிவி.சண்முகம் வைத்த கோரிக்கைக்கு 1500 கோடி ரூபாயில் கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கு நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டினேன். மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தைக் கூட நிறுத்திய அரசு, இந்த கேவலமான தி.மு.க. அரசு.

இது விவசாயிகள் நிறைந்த மாவட்டம். பல்கலைக்கழகம் அம்மா பெயரில் கொண்டுவந்தோம் ரத்து செய்துவிட்டீர்கள். அ.தி.மு.க. ஆட்சி மலரும் மீண்டும் கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், அம்மா பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கப்படும். அம்மா உணவகம் குறைந்த விலையில் உணவு கிடைக்கும். தரம், பணியாளர்களைக் குறைத்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், தாங்கள் இருக்கும் ஊர்களிலும், அருகாமையிலும் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்குசென்று சிகிச்சை எடுத்துவந்தனர். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவற்றை மூடிவிட்டனர். ஏழை கண்ணீர் உங்களை சும்மா விடாது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.

தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.

எம்.ஜி.ஆர். தோற்றுவித்து, அம்மா கட்டிக்காத்த கட்சி இது. ஏழைகளுக்காக திட்டம் கொண்டுவருவோம். தி.மு.க.வுக்கு இது இறுதி தேர்தல். விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன. தூர் வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது.

ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. அவற்றில் 8 ஆயிரம் ஏரிகள் 1240 கோடி செலவில் தூர் வாரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் கட்டுப்பாட்டில் இருக்கும் 26 ஆயிரம் கண்மாய்களும் தூர்வாரப்பட்டன. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. இதைக்கூட நான்கரை ஆண்டுகள் தொடங்கவில்லை. தேர்தல் வருவதால் கடைசி நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுத்தார். தரமற்ற லேப்டாப். அதுவும் 10 லட்சம் பேர் என்று சொல்லி 2 லட்சம் பேருக்குத் தான் கொடுத்தனர்.

கொரோனா காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை; கலால் வரி, வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இருந்தபோதும், கொரோனா காலத்தில் விலைவாசி உயராமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது. இப்போது பல திட்டங்களை அறிவித்திருக்கிறீர்களே, எங்கே நிதி என்று கேள்வி கேட்கிறார்கள்.

எங்களுக்குத் திறமை இருக்கிறது, புத்தி இருக்கிறது, அறிவு இருக்கிறது ஒரு ரூபாய் வருமானம் இல்லாதபோதே சிறப்பான ஆட்சி கொடுத்தோம். திமுக ஆட்சியில் கூடுதல் வருமானம் வந்து கடன் வாங்குகிறார்கள், காரணம் ஊழல். பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் கடன் சுமை அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சிறப்பாக செயல்படும். புயல் வெள்ளம் வந்தது சரியான எச்சரிக்கை கொடுக்காமல் அணையை திறந்துவிட்டார்கள், இரவோடு இரவாக இரண்டரை லட்சம் கன அடி திறந்ததால், விழுப்புரம் தண்ணீரில் தத்தளித்தது 3 நாட்கள் மின்சாரம் இல்லை, சாப்பாடு இல்லை.

கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டு காலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டன; மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதே கொரோனா காலத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது.

விழுப்புரம் மாநகராட்சியில் 253 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் கொடுத்தோம், விழுப்புரம் மாநகராட்சி 100 ஆண்டு சிறப்பு நிதி 50 கோடி கொடுத்தோம், சட்டக்கல்லூரி 70 கோடி, கலை அறிவியல் கல்லூரி, நந்தன் கால்வாய் தூர் வாரினோம், கடையம் கிராமத்தில் வனத்துறை சாலை, மருத்துவமனை தரம் உயர்த்தல், தடுப்பணைகள் அமைப்பு, தூர் வாருதல், தூண்டில் வளைவு அமைத்தோம், சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தோம், திமுக அரசால் கைவிடப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக மீன்பிடி துறைமுகம் மரக்காணத்தில் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதை திமுக அரசு ரத்து செய்தது, அதிமுக ஆட்சியில் அமைப்போம், மினி டைட்டல் பார்க் திமுக அரசு ரத்து செய்தது, அதுவும் தொடங்கப்படும், பெரிய பஞ்சாயத்துகள் பிரிக்கப்படும்.

மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். 297 அறிவிப்புகள் இருக்கிறது, அனைத்தும் நிறைவேற்றப்படும்.

வானூரில் முருகன், விழுப்புரத்தில் விஜயா சுரேஷ்பாபு ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். செஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், விக்கிரவாண்டி தொகுதியில் சிவக்குமார் ஆகியோருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link