ஆ.ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியான நிலையில், வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய இபிஎஸ், நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோவை வெளியிடுவார் என்று, பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார். வழக்கு போடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்ட இபிஎஸ், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டாரா? என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
சேலத்தில் இபிஎஸ் பிரச்சாரம் சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் வாக்கு சேகரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியின்போது, 2017ல் கடுமையான வறட்சி, அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பு, பிறகு கொரோனா தொற்று பாதிப்பு. அப்போது, அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். அந்த நிலையில், ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கினோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கினோம். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட பிடித்தம் இன்றி வழங்கினோம். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 வழங்கினோம்.

திமுக ஆட்சியில்… ஆனால், திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? எந்த பாதிப்பும் இல்லை, மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால், ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து உள்ளனர். திமுக அரசின் சாதனை, நம்மை எல்லாம் கடனாளியாக மாற்றியது தான்.

வீட்டு சிறையில்… முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தான், ஆடியோ வெளியிட்டார். அந்த செய்தி உண்மையாக இருக்கலாம். அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது கோபப்பட்டால், அடுத்த ஆடியோ வெளியிட்டு விடுவார் என்று பயம். என்மீது வழக்கு போடுவார்களாம். வழக்கு போடட்டும். பல வழக்குகளை பார்த்தவன் நான். ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என்று ஆளாளுக்கு யார் வேண்டுமானாலும் பேசட்டும். திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
சட்ட ரீதியாக விசாரணைமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா? முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசி, எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
