இது விசில் புரட்சி தேர்தல்.. வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பெரம்பூரில் பரப்புரையை துவங்கிய விஜய் – tvk leader vijay files nomination in perambur for 2026 assembly election

நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ள நிலையில், பெரம்பூரில் போட்டியிடுவதற்காக விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து தான் போட்டியிடவுள்ள தொகுதியில் பிரச்சாரத்தையும் துவங்கவுள்ளார்.

தவெக விஜய்
சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து கட்சிகளின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை விறுவிறுப்பாக்கி கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார் விஜய். இதனிடையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவங்கி விட்டார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பெரம்பூரில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் விஜய். வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் முதல் நாளே, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் அமைந்துள்ள பெரம்பூர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
முதல் நாளே வேட்புமனுத் தாக்கல்
முன்னதாக பெரம்பூர் நோக்கி அவர் வாகனத்தில் வந்த நிலையில், விஜய்யை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கையசைத்தனர். தொடர்ந்து சிக்னலில் அவர் கார் நின்ற நிலையில், வாகன ஓட்டிகள் சில கீழே இறங்கி அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரம்பூர் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி
அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி கிழக்கில் எப்போது வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார் விஜய். இதனிடையில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் இருந்து தவெக தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பிரசாரத்தையும் துவங்கவுள்ளார்.
சொந்த தொகுதியில் இருந்து பிரச்சாரம் துவக்கம்
அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் விஜய். மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரையிலும் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் 5 முதல் 6 மணி வரைக்கு பிரச்சாரம் செய்யவுள்ளார். அங்கிருந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த பகுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து மாலை 6 முதல் 7 மணி வரை பிரச்சாரம் செய்யவுள்ளார் விஜய்.
மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் பிரச்சாரம்
வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு மூன்று சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். தொடர்ந்து சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கான பணிகள் தவெக சார்பாக நடந்து வருகிறது. இதனிடையில் விஜய் பிரச்சார வாகனத்தை இரு சக்கரம் உள்ளிட்ட எந்த விதமான வாகனங்களிலும் பின்தொடர்ந்து வர வேண்டாமென தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் நட்சத்திர தொகுதியாகியுள்ளது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவான ஆர்.டி. சேகர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய்காக வேட்பாளரை மாற்றாமல், அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த முறை சுமார் 55 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்றார். இதனால் இந்த தடவை விஜய்க்கு இந்த தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் பெரம்பூர் என தனது பரப்புரைய துவங்கியுள்ளார் விஜய். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு வந்துள்ள எங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என பேசியுள்ளார் விஜய்.