இந்தியாவின் மிகப்பெரிய மோசடி கட்சி திமுகதான்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது.

தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13%வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது.

66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னையில் வெளியிட்டேன். அதன்பின், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கையை 80% ஆகவும், 75% ஆகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டார்.

ஆனால், இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது. தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link