சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் மீது ஒரு கண்ணோட்டம்.
அரசு நடத்திய முக்கிய விளையாட்டுப் போட்டிகள்
· 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022
· சென்னை பார்முலா- 4 கார் பந்தயம் 2024
· சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022
· ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023
· ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023
· கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023
· சர்வதேச அலை சறுக்குப் போட்டி- 2023
· சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2025
· முதல்-அமைச்சர் கோப்பை-2023-2024, 2024-2025, 2025-2026
ஆகிய போட்டிகள் எல்லாம் தொடர்ந்து நடத்தி உலக அளவில் விளையாட்டு ஆர்வலர்களிடையே தமிழ்நாடு ஒரு முக்கிய விளையாட்டு களமாக மதிக்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட அரசு வழங்கும் உதவிகள்
விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சிகள் பெற உதவித் தொகை, தங்கும் இடம் வசதி, போட்டிகளில் பங்கேற்க வெளிஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வரும் பயணச் செலவுகள் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பரிசுகள், ஊக்கத்தொகைகள் அனைத்தும், போட்டிகளுக்கு ஏற்ப சிறப்பிக்கப்படுகிறார்கள். அவர்களிலும் சிறந்த வெற்றிகளை ஈட்டி தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசிற்கும் புகழ் தேடித் தரும் வீரர் வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகளிலும் அரசின், பொதுத்துறை நிறுவனங்களிலும் உயர் ஊதியத்துடன் பணிநியமனங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ஓய்வூதியங்களும் வழங்கப்படுகின்றன.
அரசு, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனங்கள்
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஐந்து ஆண்டுகளில் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 301 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட 6689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.
உலகத் தரத்தில் விளையாட்டு நகரம்
சென்னை ராஜிவ் காந்தி சாலை என அழைக்கப்படும் பல்வகை விளையாட்டுகளுக்கும் அளித்திடும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள செம்மஞ்சேரியில் ரூ. 261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது.
சிறு விளையாட்டு அரங்கங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து, மொத்தம் 234 சிறு விளையாட்டு அரங்கங்களும் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றுள், இதுவரை 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய அரங்கங்களின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பப் பெறுவதற்காக அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் தேவைப்படும் விளையாட்டுக் கருவிகள், எல்லா ஊர்களிலும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12 ,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமை உள்ள வீரர் வீராங்கனைகளின் தேவைகளை நிறைவு செய்து அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுக்கும் முனைப்புடன் 8.5.2023 அன்று ஒரு புதிய முயற்சியாக; தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கிவைத்தார்கள். வீரர் வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் புகழ் தேடித் தருகின்றனர். அண்மையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளமையைப் பாராட்டி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்குச் சிறந்த அங்கீகாரம் அளித்து இந்தியா ஸ்போர்ட்ஸ் விருது 2025 (FICCI) வழங்கிப் பாராட்டியது.
இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் விருது
திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறைக்கு அளித்துவரும் அளப்பரிய உதவிகளையும் ஊக்கங்களையும் பாராட்டி போற்றும் வண்ணம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.
இந்து குழுமத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான விருது
விளையாட்டுத்துறைக்கு திராவிட மாடல் அரசு வழங்கிவரும் அபரிமிதமான ஊக்கத்தைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான தி இந்து குழுமம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் 2024 விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
ஒலிம்பிக் அகாடெமிகள்
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களும் வீராங்கணைகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் பெறுவதை ஊக்குவிப்பதற்காக ஒலிம்பிக் தங்கம் தேடல் என்னும் திட்டத்தைத் திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முறையான பயிற்சிகள் அளித்திடும் நோக்கில் சென்னை, திருச்சி, மதுரை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடெமிகளை திராவிட மாடல் அரசு நிறுவியுள்ளது.
சர்வதேசத் தரத்தில் விளையாட்டுக் களங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கங்களிலும் சர்வதேசத் தரத்தில் செயற்கை ஓடுபாதைகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், மாவட்ட விளையாட்டு வளாகங்கள், சிறு விளையாட்டு அரங்குகள், தங்கும் விடுதிகள், பயிற்சி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
40 சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்
வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திராவிட மாடல் அரசின் முனைப்பால் 40 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சர்வதேசப் போட்டிகள் நம் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளன என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சாதனையாகும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் புகழ்க் கொடி நாட்டும் வகையில் சிறப்பாக வளர்த்தெடுத்து வருவதால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என இன்று பெற்றுள்ள புகழ் நாளை, உலகின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என்னும் பெருமையையும் புகழையும் ஈட்டும் என்பது உறுதி உறுதி!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
