‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்து கா்நாடகத்தின் பெங்களூரைச் சோ்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 20 முதல் 29 வயதுக்குள்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமாா் 1.1 கோடி போ் வேலையில்லாமல் இருப்பது தெரிய வந்தது.15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகள் இடையே வேலை வாய்ப்பின்மை 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது.
உயா்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனாலும் தேவையான அளவுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே வேலையின்மை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 2004-05 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் இளைஞா்கள் பட்டதாரிகளாகஉருவாகி உள்ளனர். இவர்களில் வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. மீதமுள்ள 22 லட்சம் பேர் எந்த பணியிலும் சேரவில்லை.
இதே போன்று குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் இளைஞா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த இடை நிற்றல், 2023-இல் 72 சதவீதமாக உயா்ந்துள்ளது. குடும்ப வருமானத்தைப் பெருக்க இளைஞா்கள் உயா்கல்வியைத் தவிா்த்துவிட்டு, குறைவான ஊதியத்தில் தகுதியற்ற பணிகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

