‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது' – டிரம்ப் பெருமிதம்

வாஷிங்டன்,

இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவாகியுள்ளது. இதன்படி, இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கினால், மீண்டும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபிறகு இந்தியாவில் இருந்து ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அதேபோல அமெரிக்க பொருட்களும் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் நிலக்கரியை அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“எனது அரசாங்கத்தின் தலைமையில் அமெரிக்கா ஒரு மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களில், நமது நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.

நாம் இப்போது உலகம் முழுவதும் நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறோம். நமது நிலக்கரியின் தரம், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link