மும்பை,
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.
ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும்.
