தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தி.மு.க. 173, காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதிதமிழர் பேரவை 1 என போட்டியிட்டன. இதில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை தவிர ஏனைய கட்சிகள் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள்:
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடந்த தேர்தலைவிட இருமடங்கு அதிகம். ஆனால், தி.மு.க. கூட்டணியில் இத்தனை கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், காங்கிரஸ் (28), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) உள்ளிட்டவைகளுடன் மட்டுமே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமாக அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றாலும், கூட்டணி கட்சிகளுடன் போன் மூலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தொகுதிகள் ஒதுக்கீடு எப்படி?
அந்த வகையில், தே.மு.தி.க.வுக்கு 8, ம.தி.மு.க.வுக்கு 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால், தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை குறைக்கலாமா? என்றும் தி.மு.க. தலைமை யோசித்து வருகிறது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2, மக்கள் நீதி மய்யத்துக்கு 2, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 1, முக்குலத்தோர் புலிப்படைக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, எஸ்.டி.பி.ஐ.க்கு 1, ஆதி தமிழர் பேரவைக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு:
எது எப்படியோ, இந்த வார இறுதிக்குள் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகளை அடையாளம் காணும் பணியை முடித்துவிட, டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவினருக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். வரும் ஞாயிற்றுக்கிழமையே தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு விவரங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. தேர்தல் அறிக்கை:
அதேபோல் அடுத்த வார இறுதிக்குள் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் முழுமையாக முடித்துவிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு பெற்று தேர்தல் அறிக்கையை தயாரித்து முடித்துள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் விடுபட்ட 150 அறிவிப்புகளும் வரும் தேர்தல் அறிக்கையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கை அச்சிடும் பணியில் உள்ளது. அடுத்த வாரம் 18-ந் தேதிக்கு மேல் எந்த நேரமும் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
