இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து ஆன்லைன் மோசடிகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
UPI அல்லது IMPS மூலம் ரூ.10,000-க்கும் அதிகமான தொகையை அனுப்பும் போது, அந்தப் பரிவர்த்தனை உடனடியாக நிறைவேறாமல், ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் அனுப்புநர், பெறுநர் விவரங்களை மீண்டும் சரிபார்க்கலாம். ஏதேனும் மோசடி சந்தேகம் இருந்தால், பரிவர்த்தனையை ரத்து செய்யும் வாய்ப்பு இருக்கும்.
ஏன் தாமதம்? RBI தரப்பில் கூறப்படுவதாவது, தற்போதைய மோசடிகளில் பெரும்பாலானவை ‘social engineering’ மூலம் நடக்கின்றன. மோசடிக்காரர்கள் பயமுறுத்தல், அவசரம் போன்ற உத்திகள் மூலம் உடனடி பண பரிமாற்றத்தை வற்புறுத்துகிறார்கள். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிந்திக்கும் நேரமே கிடைக்கவில்லை. இதனால்தான், ஒரு மணி நேரத் தாமதம் அவர்கள் சிந்தித்து அந்தப் பரிவர்த்தனையை நிறுத்த உதவக்கூடும்.
இந்திய ரிசர்வ் வங்கி சில தளர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது. அதாவது இந்த ஒரு மணி நேர கால தாமதம் அனைவருக்கும் பொருந்தாது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை அனுமதிப்பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அவர்களுக்குப் பணம் அனுப்பும்போது எந்தத் தாமதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். இந்த விதி வணிகர் கொடுப்பனவுகள் (கடைகளில் செய்யப்படும் கொடுப்பனவுகள்), மின்னணு ஆணைகள், காசோலைகள் மற்றும் NACH பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது.
ரிசர்வ் வங்கியின் புதிய முன்மொழிவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
* ரூ. 10,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படும், அந்த நேரத்தில் வாடிக்கையாளர் பரிவர்த்தனையை ரத்து செய்யலாம்.
* மூத்த குடிமக்கள், அதாவது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரூ. 50,000-க்கு மேல் பரிமாற்றம் செய்வதற்கு நம்பகமான ஒருவரின் அனுமதி கட்டாயமாகும்.
* தனிநபர் மற்றும் சிறு வணிகக் கணக்குகளில் வைப்புத்தொகை ரூ. 25 லட்சத்தைத் தாண்டினால், உறுதிப்படுத்திய பின்னரே வங்கி பணத்தை வரவு வைக்கும்.
* வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சேனல்களையும் (UPI, அட்டைதாரர் ஐடி, இணைய வங்கிச் சேவை) ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்ய அனுமதிக்கும் ஒரு பொத்தானான ‘கில் ஸ்விட்ச்’ ஒன்றையும் இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
