இபிஎஸ்ஸின் கொலைவெறி இன்னும் போகவில்லை.. முதல்வரின் மனைவி கதறி அழுதார்.. ஆர்.எஸ். பாரதி காட்டம் – dmk rs bharathi condemns edappadi palaniswami speech about cm mk stalin

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தான எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் இபிஎஸ், திமுக ஆட்சி பற்றியும் முதல்வர் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் திநகரில் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இபிஎஸ் சர்ச்சை பேச்சு
அதாவது, “கொரோனா போன்ற பேரிடர்கள் திமுக ஆட்சியில் கிடையாது. அதுபோல் ஏதாவது வந்திருந்தால் முதல்வரே கொரோனாவில் போயிருப்பார்” என பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு பலத்தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஒரு தேர்தலுக்காக இவ்வளவு தரம் தாழ்ந்து பேச வேண்டுமா என பலரும் இபிஎஸ் நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி கண்டனம்
இது சம்பந்தமாக அவர் பேசுகையில் எவ்வளவு வாய் கொழுப்பு, திமிரு இருந்தால் கொரோனாவில் முதல்வர் போய் சேர்ந்திருப்பார் என்று பேசியிருப்பார். உயிருக்கு பயந்தவர் கிடையாது. அன்றைக்கு கொரோனா வார்டுக்குள் சென்று வந்த நேரத்தில், அவருடைய துணைவியார் துர்கா கதறி அழுதார். திமுகவில் மூத்த தலைவர்கள் நாங்கள் அனைவரும் அந்த சமயத்தில் கலங்கினோம். இபிஎஸ்ஸுக்கு கொலை, கொள்ளை எல்லாம் கைவந்த கலை.

ஆயுள் கைதியாக இபிஎஸ் இருந்திருப்பார்
அவர் மூன்று பேரை கொலை செய்து குற்றவாளியாக இருந்தவர். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் இல்லையென்றால் இபிஎஸ் ஆயுள் கைதியாக இருந்திருப்பார். நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைச்சாலும் அதோடு புத்தி போகாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது போல எடப்பாடியின் கொலை வெறி இன்னமும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஆர்.எஸ். பாரதி.

சாத்தன்குளம் வழக்கின் தீர்ப்பு
மேலும், “இபிஎஸ் மூடி மறைத்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு அண்மையில் வந்துள்ளது. அத்தனை பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொடநாடு வழக்கு பற்றியும் உண்மை வெளியில் வரும். எடப்பாடி ஆட்சி காலத்தில் தான் கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தது. அந்த வழக்கின் விசாரணை நடந்து தீர்ப்பு வரும் போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாத்தான்குளம் வழக்கை போல் தண்டனை கிட்டும்” எனவும் திட்டவட்டமாக ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி
இதனிடையில் நேற்றைய தினம் பரப்புரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “என்னுடைய மரணத்தை பற்றி இபிஎஸ் பேசுகிறார். மரணத்தை பார்த்து பயப்படுகிறவனோ, கலங்குபவனோ நான் கிடையாது. கொரோனோவால் அனைவரும் அச்சத்தில் இருந்த சமயத்தில், அதற்கான உடை அணித்து கொரோனா வார்டுக்குள் சென்றேன். நான் இதுபோல் செய்ய போகிறேன் என்பதை யாரிடமும் சொல்லவில்லை.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உதவியாளர்கள் என அனைவரும் இருந்தும், யாரிடமும் நான் சொல்லவில்லை. இதனால் என் மனைவி துர்கா, கோபித்துக் கொண்டு என்னிடம் பேசாமல் இருந்தார். மக்களை காப்பதற்காக எந்த எல்லைக்கும் துணிச்சலாக செல்வேன். இதற்காக எல்லாம் பயந்து நான் அரசியல் தலைவராகவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Source link