புதுடெல்லி
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா (வயது 32). கடந்த 2013-ம் ஆண்டு தனது 20-வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
இதில் சுயநினைவை இழந்த ஹரிஷ் ராணா கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு 13 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஹரிஷின் வயதான பெற்றோர், தங்கள் மகனின் சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாமலும், அவர் அனுபவிக்கும் வேதனையை கண்டும் மனமுடைந்தனர்.
அதேவேளையில் ஹரிஷ் ராணா இனி குணமடைய மாட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், அவரை இப்படியே துன்பப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று நினைத்து, தனது மகனின் உடல்நிலையை முழுமையாக பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டும், ஹரிஷை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டும் டெல்லி ஐகோர்ட்டை நாடினார்கள்.
ஆனால் ஹரிஷ் ராணா வெளிப்புற மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக உயிரோடு இருப்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்டு, அவரது பெற்றோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். முதலில் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கொண்டு ஏதேனும் உத்தரவு தேவைப்பட்டால் கோர்ட்டை நாடலாம் எனவும் அறிவுறுத்தி இருந்தது.
இதனையடுத்து மீண்டும் ஹரிஷின் பெற்றோர், மகனுக்கு கருணை மரணம் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையின்படி, ஹரிஷ் மீண்டு வர வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு வழங்கப்படும் செயற்கை உணவு மற்றும் நீர் போன்ற வாழ்வாதார உதவிகளை நிறுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இந்த வாழ்வாதார உதவிகளை திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பு பற்றி கூறும்போது, அந்த இளைஞர் தூங்குவதும், எழுவதும் என காணப்படுகிறார். இது சுழற்சி முறையில் நடந்து வருகிறது. ஆனால், அவர் யாருடனும் பேசவில்லை. சுய தேவைக்கான எல்லா விசயங்களுக்கும் பிறரை சார்ந்திருக்கிறார். அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பர்திவாலா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி விட்டு, இருக்கையில் இருந்து எழுந்து சென்று சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
