டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலியானோருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில், இஸ்ரேலின் வெளிவிவகார துறை மந்திரி கிதியோன் சார், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இன்று வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் ஆட்சியின் சமீபத்திய செயல்கள், இஸ்ரேலுக்கான நேரடி தாக்குதல் என்பது மட்டுமின்றி அதன் அடாவடித்தனம் ஆனது மண்டலம் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஈரானை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டிக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
உடனடியாக, இஸ்லாமிய புரட்சி காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும். இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஜனாதிபதி கவுன்சில், ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ஸ் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்திற்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் குடிமக்களில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்றும் சார் கூறியுள்ளார்.
