இஸ்லாமாபாத்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இதை செய்ய தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இந்த இறுதி எச்சரிக்கையை ஈரான், ஏளனம் செய்ததுடன், முட்டாள்தனமானது எனக்கூறி நிராகரித்தது.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது என ஈரானுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார். அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் சீராகவும், வலுவாகவும் முன்னேறி வருகின்றன. ராஜதந்திர முயற்சிகள் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கும் வகையில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அதிபர் டிரம்ப்பிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல், ஈரானிய சகோதரர்கள் ஹார்முஸ் ஜலசந்தியை 2 வார காலத்திற்குள் திறக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, போரை ஒரு திட்டவட்டமான முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திர முயற்சிகளுக்கு வழிவகுக்கும் வகையில், போரிடும் அனைத்துத் தரப்பினரும் எல்லா இடங்களிலும் இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
