ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஹார்முஸ் ஜலசந்தி மூடல் விவகாரம் தற்போது முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த கடற்பாதை மூடப்பட்டதால் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு, பல நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் டிரம்ப்புடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், 2 வாரங்களுக்கு போர் நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது முடிவிற்கான காரணங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதில், ஈரானில் குறிவைத்திருந்த அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் ஏற்கனவே அடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஈரான் சார்பில் 10 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்ட முன்மொழிவு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாகவும், இது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நல்ல அடித்தளமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை உருவாக்க ஒரு உறுதியான ஒப்பந்தத்தை எட்டுவதற்காகவே இந்த 2 வார கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஹார்மூஸ் திறக்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் சீராகும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலில், ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சி, இந்த மோதலுக்கு முடிவு கட்டும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் இப்போது இந்த 2 வார கால அவகாசம் உண்மையில் அமைதிக்கான வாய்ப்பாக மாறுமா என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றன.
