வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், “இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்.
இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால், ஈரானில் நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்துவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றோம். அது பேச்சுவார்த்தைக்கு உகந்த அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
