வாஷிங்டன்,
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகி உள்ளது. இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ‘குறைக்கும்’ நிலையை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய கிழக்கில் நமது மாபெரும் ராணுவ முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாங்கள் பரிசீலித்து வரும் நிலையில், நமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளது. (1) ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுதளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்தையும் முற்றிலுமாக செயலிழக்கச் செய்தல். (2) ஈரானின் பாதுகாப்புத் தொழில் தளத்தை அழித்தல். (3) விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையை ஒழித்தல்.
(4) ஈரான் அணுசக்தித் திறனை நெருங்கக்கூட ஒருபோதும் அனுமதிக்காமல், அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், அமெரிக்கா விரைவாகவும் சக்திமிக்கதாகவும் பதிலடி கொடுக்கக்கூடிய நிலையில் எப்போதும் இருத்தல். (5) இஸ்ரேல், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகள் உட்பட நமது மத்திய கிழக்கு நட்பு நாடுகளை மிக உயர்ந்த மட்டத்தில் பாதுகாத்தல். ஹார்மூஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் பிற நாடுகள், தேவைக்கேற்ப அதைக் காக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் – அமெரிக்கா அதைப் பயன்படுத்துவதில்லை! அவர்கள் கேட்டுக்கொண்டால், இந்த நாடுகளின் ஹார்மூஸ் விவகாரத்தில் நாங்கள் உதவுவோம், ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டவுடன் அது அவசியமாக இருக்காது. முக்கியமாக, இது அவர்களுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அரசு மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் யோசனையில் இருந்தாலும், போர்நிறுத்தம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. ஈரான் தரப்பின் கடுமையான பதிலடி, ஜெருசலேம் தாக்குதல் குற்றச்சாட்டு மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பிரச்சினை ஆகியவை இணைந்து, இந்த மோதல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி உள்ளன.
இந்நிலையில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விநியோக தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா சற்றே தளர்த்தி உள்ளது.
போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது, குறிப்பாக போர் துவங்கிய பின்பு அதிகப்படியான செலவுகள் மூலம் அந்நாட்டின் கடன் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் ஈரான் மீதான போருக்காக 200 பில்லியன் டாலர் நிதி வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. வேலைவாய்ப்பு குறைப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, ஏஐ தாக்கம், கடன் அதிகரிப்பு ஆகிய காரணத்தால் அமெரிக்க பொருளாதாரத்தின் சமநிலை ஆட்டம் கண்டுள்ளது.
