‘ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்’ – டிரம்ப்

வாஷிங்டன்,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது. மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஈரானில் இனி குறிவைப்பதற்கு எதுவும் இல்லை. ஈரான் மீதான தாக்குதலில் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டோம். இன்னும் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, விரைவில் ஈரானில் போர் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

Source link