ஈரான் மோதலை தடுப்பதில் பாகிஸ்தான் பங்கு வகிப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை: உமர் அப்துல்லா

ஜம்மு

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.

அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.

ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் என இந்தியா, சீனா, ரஷியா போன்ற நாடுகள் கூறி வருகின்றன. இந்த பட்டியலில் பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது. அதன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் கூறும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அளவில் தீர்வு ஏற்படும் வகையில், அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கம் வாய்ந்த பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் மத்தியஸ்தராக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் பாகிஸ்தானின் முடிவு பற்றி ஜம்மு-காஷ்மீர் மு உமர் அப்துல்லாவிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், போரை நிறுத்துவததில் பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால், நீங்களோ நானோ ஏன் ஆட்சேபனை தெரிவிக்க போகிறோம்?

இஸ்ரேலுடனும் ஈரானுடனும் அவர்களுக்கு நல்லதொரு உறவு உள்ளதென்றால், அவர்கள் அதனை செய்யட்டும். அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அவர்களுடைய பேச்சுவார்த்தையால் போர் நிறுத்தம் ஏற்படுகிறது என்றால், அதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க போவதில்லை என்றே நான் நினைக்கிறேன் என்றார்.

Source link