சென்னை,
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அன்பு, கருணை, மன்னிப்பு உள்ளிட்ட நற்குணங்களைப் போதித்தவரான இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.
ஈஸ்டர் திருநாள் உலகிற்கு சொல்லும் உன்னத செய்தி என்னவென்றால், நீதியும், நியாயமும் சிலுவையில் அறையப்பட்டாலும், பூமியில் புதைக்கப்பட்டாலும் அவை உயிர்த்தெழுந்து வரும் என்பது தான். இந்த செய்தி தமிழ்நாட்டுக்கும் மிகவும் பொருந்தும். ஐந்தாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் சதி செய்து வீழ்த்தப்பட்ட நீதி, நியாயம், நல்லாட்சி ஆகியவற்றை இந்த ஆண்டில் உயிர்த்தெழச் செய்ய வேண்டும்.
ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
