உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 46 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நள்ளிரவு முதலே ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
தெற்கு கள்ளிகுளம்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. இதில் தென் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் சுமார் 2000 பேர் கலந்துகொண்டு நள்ளிரவு 12 மணிக்கு அல்லேலூயா! அல்லேலூயா ! என்று கூறி உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக ! என்ற பாடலை பாடி கோவில் மணிகள் அடிக்கப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு பிரானின் திரு உருவ சொரூபம் திருப்பலி பீடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .
தொண்டியில் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை தத்ரூபமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயிர்த்தெழும் நிகழ்வு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தவக்காலத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலிக்கு பங்குத்தந்தை ரெமிஜியஸ், அருட்தந்தை பிரிட்டோ தலைமை ஏற்று நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அருள் சகோதரர் சார்லஸ் சகோதரிகள் செல்வம், ஞான சுகந்தா, அமலோற்பவம் கோயில் பிள்ளை ஆண்டனி ரோமியோ ஆகியோர் செய்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மக்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
இதேபோல் சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை செல்வக்குமார், உதவி பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி கொண்டாடப்பட்டது.
குருமிலாங்குடி புனித சுவக்கின் அன்னாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா தலைமையில் சிவகங்கை மறை மாவட்டத்தைச்சேர்ந்த எட்வர்ட் ராஜ் முன்னிலையில் உயிர்ப்புப் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நள்ளிரவு திருப்பலியுடன் விமரிசையாக நடைபெற்றது. திருப்பலியின்போது இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அப்போது உன்னதங்களிலே ஓசானா என்ற பாடலைப் பாடி துதித்தனர்.
இதனை அடுத்து பங்குத்தந்தை அனைவருக்கும் கிறிஸ்து உயிர்ப்பு விழாவின் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். நள்ளிரவு திருப்பலிக்கு பங்குத்தந்தை முனைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். திருப்பலி மறைவுரை சேசு சபையை சேர்ந்த ஜேம்ஸ் அடிகளார் நிகழ்த்தினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துணை பங்கு தந்தை மற்றும் அருட் சகோதரிகள் பங்கு இறை மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சை மாவட்டத்தில் பெருமைமிக்க பேராலயமாக திகழும் பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி தொடங்கியது. பேராலயத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது. கோவிலின் முகப்பில் புது நெருப்பு மந்திரிக்கப்பட்டு பேராலய அதிபர் சாம்சன் பெரிய பாஸ்கா மெழுகுவர்த்தியில் சிலுவை அடையாளம் வரைந்தார்.
மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பெரிய பாஸ்கா மெழுகுவர்த்தியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ வையும் , கடைசி எழுத்தான ‘ன’ வையும் எழுதினார். ஆண்டவருடைய ஆண்டு இது என்பதை குறிக்க 2026 என்பதை குறித்து, பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஐந்து மணிகளை பதித்தார். அதன் பின்னர் பாஸ்கா மெழுகுவர்த்தியை புனிதம் செய்து அதில் ஒளி ஏற்றி கைகளை உயர்த்தி பிடித்து ‘இயேசுவின் ஒளி இதோ’ என உரக்க பாடினார். பின்னர் அந்த மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி வந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த இறை மக்கள் இறைவா உமக்கு நன்றி என்று குரல் எழுப்பி வழிபட்டனர். மேலும், பாஸ்கா மெழுகுவர்த்தியில் இருந்து தங்கள் கைகளில் இருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டனர். பின்னர் பாஸ்கா மெழுகுவர்த்தி, பீடத்தின் அருகில் இருந்த அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டு ஈஸ்டர் தின திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செல்வகுமார், அருள் லாரன்ஸ், ஆன்மீகத் தந்தை ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு பூண்டி மாதா பேராலயம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை பெய்த போதும் ஏராளமான மக்கள் பூண்டி மாதா ஆலயத்தில் குழுமி ஈஸ்டர் தின திருப்பலியில் கலந்து கொண்டனர். இன்று நாள் முழுவதும் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
