சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உகாண்டா ராணுவ தளபதி முஹூசி கைனெருகபா வெளியிட்டுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து அவர் வெளியிட்ட பதிவுகள் தற்போது உலக அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அந்த எக்ஸ் பதிவில், “துருக்கி உடனடியாக உகாண்டாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.93 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, துருக்கியின் “உலக அழகி”யை தமக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் துருக்கி தூதரகம் மூடப்படும், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்க, துருக்கி தனது பெண்களை உகாண்டாவிற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது கருத்து கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும், துருக்கி ராணுவ ரீதியில் உகாண்டாவை வீழ்த்த முடியாது என்றும், உகாண்டா படைகள் மத நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக 1 லட்சம் உகாண்டா வீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது “புனித நிலங்களை பாதுகாக்கும் முயற்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.
யார் இந்த முஹூசி கைனெருகபா? முஹூசி கைனெருகபாநாட்டின் நீண்டகால அதிபரான யோவேரி முசெவேனி அவர்களின் மகன். இவர் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும், “தேசபக்தி லீக்” அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, வெளிநாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் குறித்து அவர் சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகள், இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவதாகக் கருதப்படுகின்றன.
முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன. மெலோனியை திருமணம் செய்து கொள்ள 100 மாடுகளை “சீதனமாக” வழங்குவதாகவும், தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் படையெடுப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனுடன், மெலோனியின் “மணப்பெண் விலை” குறித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலி தூதருக்கு அவர் அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
