சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
ஒன்றிய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சார்பில் கேரள மாநிலத்தில் பூமிக்கு அடியில் தொலைத் தொடர்பு கேபிள் பதிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டது. ராஜேந்திரன் என்பவர் 2017-19 ஆம் ஆண்டுகளில் கேரளத்தில் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளராக பணியாற்றினார். அக்காலக் கட்டத்தில், ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றார் என்று அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாகவும், அதனையடுத்து ஒப்பந்ததாரர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த அதிகாரியின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது. அவரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், கொச்சியிலுள்ள சி.பி.ஐ. அவர்மீது பிரிவு 7 ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதுவரை எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் துறையின் சார்பில் எடுக்கப்படவில்லை.
சி.பி.ஐ.யிடம் புகார் அளித்து 4 ஆண்டுகள் கழிந்த பின்னர், கடந்த 2026 ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அனைத்துவிதமான ஆதாரங்களும் சி.பி.ஐ.யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை சி.பி.ஐ., பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் அளித்து சரிபார்க்கக் கோரியது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆதாரங்களை ஆய்வு செய்து, கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் சரியே என்று சி.பி.ஐ.க்கு விளக்கம் அளித்துள்ளது. இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்றுவரை ராஜேந்திரன் அவர்களை கைது செய்யாமல் அவர் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுவதற்கு வசதி செய்து கொடுப்பதாக அறியப்படுகிறது.
ஏப்ரல் 2026 இல் ஓய்வு பெறும் நிலையில் உள்ள முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரனுக்கு பாசிச பா.ஜ.க. அரசு உறுதுணையாக இருந்து ஊழல் அதிகாரியை காப்பாற்றும் வகையில் செயல்படுவதையறிந்து வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேடைதோறும் ஊழலை ஒழிப்பேன், ஊழல் செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என வாயில் வடை சுடும் நரேந்திர மோடி, ஊழல் அதிகாரிகளை வளர்த்தெடுப்பதிலும், அவர்களை பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்கிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசு ஊழல் அரசு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் ?
மோடி அரசு இனியும் காலம் தாழ்த்திடாமல் முதன்மை பொதுமேலாளர் ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
