தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஈராயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் சக்தி வாய்ந்த நிபுணர்கள் சபை, நாட்டின் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்றிரவு கூடியது. அதில், மறைந்த தலைவர் காமேனியின் மகனான மோஜ்தபா காமேனியை தலைவராக தேர்ந்தெடுப்பது என முடிவு செய்து அதற்கான முடிவை இன்று அறிவித்தது.
இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே இன்று கூறும்போது, ஈரானின் பரவலான எரிசக்தி வளங்களை சட்டவிரோத வழியில் அபகரிக்கும் நோக்கில் அமெரிக்காவின் செயல்பாடுகள் உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கை, ஈரானின் இறையாண்மையை மீறி செயல்பட்டு, பலவீனப்படுத்துவதே ஆகும். ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பு பல கட்ட சுற்றுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், ஈரானுக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள், அவர்களுடைய ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே ஆகும்.
அவர்களின் நோக்கம், எங்கள் நாட்டை பிளவுபடுத்தி சட்டவிரோத வகையில், எங்களின் எண்ணெய் வளங்களை அபகரிப்பதே ஆகும். அவர்களுடைய குற்றங்களை நியாயப்படுத்த, அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டுள்ளனர். இந்த உண்மைகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. இதனை நாங்கள் விரிவாக கூற வேண்டியதில்லை என கூறியுள்ளார்.
