எடப்பாடி வேட்பாளர் அருண்குமார் கடத்தப்பட்டரா? தவெக வேட்புமனு நிராகரிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி – tvk nomination rejected in edappadi was candidate arunkumar kidnapped

எடப்பாடி தவெக வேட்பாளர் மனு நிராகரிப்பு. அவர் கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் புகார் கூறிப் போராட்டம் நடத்தியதால், அத்தொகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

TVK Nomination Rejected(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடும் நட்சத்திர தொகுதியான எடப்பாடியில் இன்று அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும், வேட்பாளர் மாயமானதாகக் கூறப்படும் புகாரும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

வேட்புமனு நிராகரிப்புக்கான காரணம்

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அருண்குமார். ஒருவேளை அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் மாற்றாக நித்யா என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

முக்கிய காரணம் என்ன?

அருண்குமாரின் மனுவை முன்மொழிந்தவர்களைத் தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுவில் இருந்த சில தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக இந்தத் தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தவெக, தற்போது 233 தொகுதிகளில் மட்டுமே களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர் கடத்தப்பட்டாரா? – தொண்டர்கள் முற்றுகை

மனு நிராகரிக்கப்பட்ட செய்தி வெளியான அதே வேளையில், வேட்பாளர் அருண்குமாரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் மற்றும் அருண்குமாரின் ஆதரவாளர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எங்கள் வேட்பாளர் அருண்குமாரைக் காணவில்லை, யாரோ அவரை கடத்திவிட்டார்கள் எனப் புகார் கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அப்பகுதி போர்க்களம் போலக் காட்சியளித்தது.