சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற இயக்கத்தை தொடங்கி, மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
ஆனால், அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக, அவரது அணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிட்டனர். கடைசியில் தனி மரமான நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான அய்யப்பனும் (உசிலம்பட்டி தொகுதி), சட்டசபையில் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியை பாராட்டி பேசியதுடன், அவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்தார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் 31-ந் தேதி காலை, நடைபயிற்சி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசினார். பின்னர், அன்று மாலையே ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பியபோது, “அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் கிடையாது. எதிரியும் கிடையாது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” என்று அப்போதே ‘புதிர்’ வைத்து பேசினார்.
இந்த நிலையில்தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. அரசுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தனது இன்னொரு மகன் ஜெய பிரதீப்புக்கு தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தபோதும், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அது நிறைவேறாமல் போகவே, சமீபத்தில் வெளிப்படையாகவே, “அ.தி.மு.க.வில் இணைய நான் ரெடி, சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ரெடியா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, “முடியவே முடியாது” என்று சாதித்துவிட்டார். இனி அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
“எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ள அவர், இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க முடியும் என்று நினைக்கிறாராம்.
தனது அரசியல் வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகள் அ.தி.மு.க.விலேயே பயணித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2001, 2006 சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் இருந்தும், 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தலில் போடி நாயக்கனூரில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், 3 முறை (2001-2002, 2014-2015, 2016-2017) முதல்-அமைச்சராகவும், 4 ஆண்டுகள் (2017-2021) துணை முதல்-அமைச்சராகவும் இருந்துள்ளார். துணை முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் கட்சியிலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பிலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
