“எதிர்காலத்தை ஆளப்போகும் இளம் கண்மணிகளுக்கு..” – எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப்போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!

​ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

​இன்றைய திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!

​அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.

பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும். ​மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் ரூ.5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் ,

தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link